ISSF உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று (நவம்பர் 10) செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்தது. மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிப் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய நிலையில், தனிநபர் பிரிவிலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
அணிப் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்!
இரண்டு நாட்களாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் 590 புள்ளிகளைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். மனு பாக்கர் 587 புள்ளிகளும், திவ்யா சுப்பராஜு 584 புள்ளிகளும் பெற்றனர். இதன்மூலம் இந்திய அணி மொத்தமாக 1761 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. தென் கொரிய அணி 1748 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் அணி 1745 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.
தனிநபர் இறுதிப்போட்டிக்கு ஈஷா சிங், மனு பாக்கர் தகுதி!
அணிப் பிரிவில் தங்கம் வென்றதுடன், தனிநபர் பிரிவிலும் ஈஷா சிங் மற்றும் மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இடத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 21 வயதான ஈஷா சிங், தனிநபர் தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் டோரீன் வென்காம்ப் 592 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் 591 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். இதில் டோரீன் வென்காம்ப் 592 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனையைச் சமன் செய்தார்.
திங்கள்கிழமை நடைபெற்ற Precision சுற்றில் 292 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த ஈஷா சிங், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Rapid சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று தொடர்களில் முறையே 100, 98, 100 என மொத்தம் 298 புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 590 புள்ளிகளுடன் தகுதிச்சுற்றை நிறைவு செய்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். இதேபோல், Precision சுற்றில் 289 புள்ளிகள் பெற்றிருந்த மனு பாக்கர், Rapid சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று தொடர்களில் முறையே 99, 99, 100 என மொத்தம் 298 புள்ளிகளைப் பெற்றார். ஒட்டுமொத்தமாக 587 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான திவ்யா சுப்பராஜு 584 புள்ளிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவரால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி வாய்ப்பு!
தனிநபர் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வதன் மூலம் இந்தியாவுக்கு 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இடங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் மூன்று வீராங்கனைகளின் நாடுகளுக்கும் தலா ஒரு ஒலிம்பிக் தகுதி இடம் வழங்கப்படும். எனவே, ஈஷா சிங் மற்றும் மனு பாக்கர் இருவரும் பதக்க மேடையில் இடம்பிடித்தால் இந்தியாவுக்கு இரண்டு ஒலிம்பிக் தகுதி இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே, இதே உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜெய்பால் மால்வியா வெள்ளிப் பதக்கம் வென்று, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இடத்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளார். இந்நிலையில், மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிப் பிரிவில் இந்தியா தங்கம் வென்றதும், தனிநபர் பிரிவில் இரண்டு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.




