இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் வெள்ளம்: 16 பேர் உயிரிழப்பு; 10 பேரைத் தேடும் பணி தீவிரம்!

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணியில் 325 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கனமழையால் சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள போகோர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சிசியூரே ஆற்றில் கடந்த (நவம்பர் 23) திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீர் அருகிலிருந்த சட்டவிரோத தங்கச் சுரங்கத்துக்குள் புகுந்தது. சுமார் 100 மீட்டர் (330 அடி) ஆழம் கொண்ட அந்தச் சுரங்கத்தில் தங்கத் துகள்களைத் தேடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வெள்ளம் சுரங்கத்துக்குள் வேகமாகப் புகுந்ததால், ஒரு பகுதியில் இருந்த சில தொழிலாளர்கள் மட்டும் தப்பியுள்ளனர். மற்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

16 பேர் உடல்கள் மீட்பு; 10 பேரைத் தேடும் பணி!

இந்தச் சுரங்கம் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததால், விபத்து குறித்து அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களும் பொதுமக்களும் தாங்களாகவே தண்ணீரை வெளியேற்ற முயன்றுள்ளனர். ஆனால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து மீட்புக் குழுவினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. வெள்ளம் புகுந்து சுமார் 16 மணி நேரத்துக்குப் பிறகே காவல்துறையினருக்கு இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசுக்குச் சொந்தமான PT Antam நிறுவனமும் (நவம்பர் 25) புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ஜகார்த்தா தேடுதல் மற்றும் மீட்பு அமைப்புக்குத் தகவல் அளித்தது. இதனைத் தொடர்ந்து முழுவீச்சில் மீட்புப் பணிகள் தொடங்கின. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு குறைவு!

சுரங்கத்துக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நீர்மூழ்கிக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், நிலத்தடி நீர் சுரங்கத்துக்குள் கசிவதைத் தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (நவம்பர் 26) வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியில் 325 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். அருகருகே அமைந்துள்ள இரண்டு சுரங்கப் பாதைகளில் கயிறுகள் உதவியுடன் உள்ளே சென்று சிக்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கு ஜாவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹெந்திரா ரோச்மாவன் கூறுகையில், விபத்து நிகழ்ந்து நான்காவது நாளான நிலையில், உயிருடன் யாரையும் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், யாராவது உயிருடன் இருந்தால் அது அதிசயமாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத சுரங்கங்களால் தொடரும் ஆபத்து!

இந்த விபத்து நிகழ்ந்த சுரங்கம், PT Antam நிறுவனத்தின் பொங்கோர் தங்கச் சுரங்கப் பிரிவின் வசதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கும் தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என PT Antam நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இதுபோன்ற சட்டவிரோத மற்றும் முறைசாரா சுரங்கத் தொழில்கள் பரவலாக உள்ளன. ஆயிரக்கணக்கானோர் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி இத்தகைய சுரங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, சுரங்கப் பாதைகள் இடிந்து விழுதல் போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் பாதரசம் மற்றும் சயனைடு போன்ற நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் தொழிலாளர்களின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் கடுமையான ஆபத்து நிலவுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.