ஈரோடு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமிகளை கடத்திய இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கெளரிசங்கர், கூலித் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். தொடர்ந்து மாணவியை கடத்திச் சென்றவர் கட்டாயத் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் கௌரிசங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் பர்கூர் மலையை சேர்ந்த மணிகண்டன் என்ற கட்டத் தொழிலாளிக்கும், அந்தியூர் அடுத்த தாசளியூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற மணிகண்டன் அவரை கட்டாயத் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.







