கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அருகே இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முருகன் குன்றம் பகுதியில் ஒருவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடும் நிலையிலும் ஒருவர் சடலமாகவும் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட இளைஞர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பதும் படுகாயமடைந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ் என்பது தெரியவந்தது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என்று கொலை நடந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலுள்ள புதருக்குள் ஒரு இளைஞர் வெட்டு காயங்களோடு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குண்டலினி ஊரைச் சேர்ந்த செல்வின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி மற்றும் கன்னியாகுமரி டிஎஸ்பி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளிவந்தது. செல்வின் மற்றும் ஜெனிஸ் ஆகிய இருவரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் ஒன்றாக இருந்தவர்கள் என்றும் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், ஜேசுராஜ், செல்வின், ஜெனிஸ் இந்த மூன்று பேருமே பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சிறையில் இருந்தபோது செல்வினுக்கும் ஜெனிஸ்க்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா போதையால் ஏற்பட்ட தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்த இரட்டை கொலையில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்க மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.







