எக்ஸ் தளத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சந்தா சேவைகள் – எலான் மஸ்க் அறிவிப்பு!

ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான…

ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம்,  ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என மாற்றினார்.  அதன் லோகோவை மாற்றினார்.  மேலும் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள எக்ஸ் பிரீமியம் சேவைக்கு,  இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு,  ஆண்டு சந்தாவாக ரூபாய் 900-ம் இணைய பயனர்களுக்கு ரூபாய் 650-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் அண்மையில் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டம் ஒன்றைச் சோதனை முயற்சியாக வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இந்தத் திட்டத்தில் சந்தா தொகை செலுத்தாத பயனர்கள்,  இனிமேல் எக்ஸ் தளத்தில் பதிவிடவோ தாங்கள் காண்கிற ட்விட்டுகளுக்கு விருப்பக்குறியோ பின்னூட்டமோ ரீ-ட்விட்டோ உள்ளிட முடியாது என தெரிவித்தது.  இதில் இணைய ஒரு ஆண்டுக்கான சந்தாத்தொகை,  ஒரு அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் பணமதிப்பிற்கேற்ப மாறும்.  ஆரம்பகட்டமாக இது பிலிப்பைன்ஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிமீயம் இல்லாத பயனர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.  ஏற்கெனவே, பயனர்களாக இருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  `போலி பதிவுகள் (ஸ்பேம்), செயற்கையான கணக்குகள் (பாட்),  பாரபட்சமான கையாளுகை ஆகியவற்றை முடக்கும் எங்களின் வெற்றிகரமான செயலுக்கு வலுவூட்டும் விதத்தில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்,  தனது எக்ஸ் பக்கத்தில் இந்த புதிய சந்தா திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, இரண்டு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். முதலாவதாக, குறைந்த கட்டணத்தில் அனைத்து மதிப்பு கூட்டப்பட்ட வசதிகளுடன் ஆனால் விளம்பரங்களில் இடைபாடுடன் பயன்படுத்தக்கூடியது.

அதேபோல் மற்றொரு திட்டத்தில், அதிக கட்டணத்தில் அனைத்து மதிப்பு கூட்டப்பட்ட வசதிகளுடன் ஆனால் எந்தவித விளம்பர இடைபாடுகளும் இல்லாமல் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.