நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் திடீரென தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ளது ஜன்ஜார்புர். இங்குள்ள நீதிமன்றத்தில், கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அவினாஷ் குமார். இவர் தனது தீர்ப்பில் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது. நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்துக்கு வந்த கோகார்திகா போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள், கோபால் பிரசாத் மற்றும் அபிமன்யு குமார் ஆகியோர், திடீரென நீதிபதியை நோக்கிச் சென்றனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அவர்களை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நீதிபதியை அவர்கள் தாக்கினர். பின்னர் துப்பாக்கி யை அவர் நெற்றியில் வைத்து மிரட்டினர்.
இதைக் கண்ட, வழக்கறிஞர்களும் ஊழியர்களும் ஓடிச் சென்று நீதிபதியை மீட்டனர். பின்னர் புகாரை அடுத்து அந்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தனது தீர்ப்புகளால் பாதிக்கப்பட்டதில் அவர்கள் தன்னைத் தாக்கி இருக்கலாம் என்று அந்த நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் ஜன்ஜார்புர் பார் கவுன்சில், இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









