சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை கரையை கடந்தது.
வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகத்தை நெருங்கியது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரி – சென்னை இடையே, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது.
நேற்று மாலை நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் நிலை கொண்டிருந்தது. இது இன்று அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் புதுச்சேரி – சென்னை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் எனவும் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேபோல இன்று அதிகாலை 1.30 மணி அளவில் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் 4 மணி நிலவரப்படி முழுமையாக கரையை கடந்தது
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததையடுத்து இன்று அதிகாலை நிலவரப்படி புதுச்சேரியில் 19 செ.மீ, கடலூர் 14 செ.மீ, ராணிப்பேட்டை 11 செ.மீ, தாம்பரம் 5 செ.மீ, நுங்கம்பாக்கம் 4 செ.மீ மழை என மழை பெய்துள்ளது.
தொடர் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,454 புகார்கள் வந்ததுள்ளன. இதில் 367 புகார்களுக்கு உடனடி நடவடிக்கையும், 1,087 புகார்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல மழைநீர் தேங்கியிருப்பதாக 1,115 புகார்களும், மரம் விழுந்திருப்பதாக 118 புகார்களும், தெருவிளக்குகள் ஒளிரவில்லை என 221 புகார்களும் வந்துள்ளன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.








