எங்களுக்கு பதவிகள் வேண்டாம் – எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி ,, அருண்மொழிதேவன், கிருஷ்ணமுரளி , பாலகிருஷ்ணரெட்டி , எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பார்வைக்கு,

2026ல் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். மற்ற தொகுதிகளில் பெரும்பான்மையான வேட்பாளர்கள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவியதோடு மிகுந்த மனவேதனையும், மனச்சோர்வும் அடைந்திருந்தனர் என்பதை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அனைவருமே நன்கு அறிந்திருந்தனர்.

கழக பொதுச் செயலாளராகிய நீங்கள் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததனால் இச்சூழ்நிலை ஏற்பட்டது. எதிர்கட்சியாக நாம் செயல்படுவோம் என நீங்கள் முடிவு எடுத்திருந்தால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்ப்பட்டிருக்காது.
சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் வெளியான 4.05.2026க்கு பின்பு கழகத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் கழகத்தின் முன்னனி நிர்வாகிகளாக செயல்பட்ட நத்தம் விஸ்வநாதன்MLA, எஸ்.பி.வேலுமணிMLA, சி.வி.சண்முகம்MLA, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன்MLA, எம்.ஆர்.விஜயபாஸ்கர்MLA, கே.சி.வீரமணிMLA உள்ளிட்ட கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 25 பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகள் திமுக எதிர்ப்பில் வளர்ந்த தமிழக வெற்றி கழகத்தை ஆதரித்ததன் நோக்கம் இதுதான்.

ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத அதிர்ச்சியாக கழகத்தில் வகித்து வந்த தலைமை கழக பொறுப்புகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் நிர்வாகிகளாக பணியாற்றியவர்களை அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து தங்களால் விடுவிக்கப்பட்டு மிகுந்த மனச்சோர்வுடன் தொடர்ந்து கழகப் பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பது தாங்கள் நன்கு அறிந்ததே.

மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நீங்கள் தமிழக முதல்வராகவும் மற்றும் கழக பொதுச் செயலாளராக அமர வைக்கவும், கழகத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ளவும் முன்நின்ற சி.வி.சண்முகம்MILA அவர்களுக்கு எந்த பதவியும் வழங்கபடாமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.

மேலும், தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஒரத்தநாடுசேகர், தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜக்கையன், தஞ்சாவூர் மாநகர் கழக செயலாளர் சரவணன், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை ஆர்.தமிழ்ச்செல்வன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து உட்பட பல்வேறு நிர்வாகிகள் அவர்கள் வகித்து இருந்த பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கபடவில்லை என்பதை மிகுந்த வறுத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.


மேலும், தேர்தலுக்கு முன் / பின் தங்களின் செயல்பாடுகளால் விலகிச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கழகத்தில் ஒருங்கிணைந்து தங்களின் தலைமையின் கீழ் செயல்பட கழக பொதுச் செயலாளர் ஆகிய நீங்கள் தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒ.எஸ்.மணியன் ஆகியோர்களை அனுப்பி கேட்டுக் கொண்டதன் பேரில் நாங்கள் சபாநாயகரிடம் கொடுத்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் கடித்தை திரும்ப பெற்றுக் கொண்டோம். அதேபோல் நீங்களும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் கடித்தை திரும்ப பெற்றுக் கொண்டீர்கள்.

அதன்படி ஏற்படுத்திக்கொண்ட சமரச உடன்படிக்கையின் படி தங்களால் 13.05.2026 அன்று கழக பொறுப்புகளில் விடுவிக்கப்பட்டவர்கள், அனைவருக்கும் மீண்டும் அவரவர் எந்த பதவிகளில் வகித்து வந்தனரோ ? அவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த கழக பொறுப்புகள், 04.06.2026 அன்று வழங்கப்படும் என தாங்கள் உறுதியளித்து இருந்தீர்கள்.

குறிப்பிட்ட காலம் கடந்து சென்ற நிலையில் 22.06.2026 அன்று எஸ்.பி.வேலுமணிMLA மற்றும் கோ.ஹரிMLA ஆகிய இருவரும் தலைமை செயலக அலுவலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, 13.05.2026 அன்று கழக பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் கழகத்தில் பதவிகள் நியமிக்க அறிவிப்பு குறித்து நினைவுபடுத்தி ஏற்கனவே அவரவர் வகித்து வந்த பதவிகளையே மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உறுதிபட தெரிவித்து இருந்தோம்.

ஆனால், தற்போது தாங்கள் அறிவித்துள்ள கழக பொறுப்பாளர்கள் பட்டியலை பார்க்கும் போது கழக வளர்ச்சியை கருத்தில் கொண்டும் கழக நலனை கருத்தில் கொண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. தாங்கள் ஒப்புக் கொண்டு உறுதியளித்தபடி தங்களால் கடந்த மாதம் கழக பதவிகளிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்துவந்த பதவிகளில் நியமிக்கப்பட வில்லை என்பதை உங்களின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இதற்கு முன்பு மாண்புமிகு அம்மா அவர்கள் மற்றும் மாண்புமிகு ஜானகி அம்மையார் அவர்களின் காலத்தில் கழகத்தில் ஜா அணி, ஜெ அணி என இருபிரிவுகளாக பிளவு ஏற்பட்டு மீண்டும் இணைந்தபோது கழக பதவிகளிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கனவே அவர்கள் வகித்த வந்த பதவிகளிலேயே தொடரும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிப்பு வெளியிட்டபட்டு ஏற்கனவே வகித்த கழக பதவிகளில் தொடர்ந்து பணியாற்றினர்.

அது மட்டுமின்றி திரு. ஒ.பி.எஸ்.அவர்களுடன் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தங்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகிச்சென்று மீண்டும் கழகத்தில் இணைந்தபோதும் பிரிவுக்கு முந்தைய நிலையில் கழக பொறுப்புகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்புகளில் நியமித்தும் அறிவிப்பு வெளியிடபட்டு அவ்வாறே கழகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பது தாங்கள் மிகவும் நன்கு அறிந்ததே.

ஆனால் தற்போது மட்டும் தாங்கள் உறுதி அளித்தபடி தங்களால் கழக பதவிகளிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவியை வழங்காமல் கட்சி நலனை கருத்தில் கொள்ளாமல் குறிப்பாக கடந்த 50 நாட்களாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சாரை சாரையாக கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

மாண்புமிகு எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களால் வளர்க்கப்பட்ட அ.இ.அ.தி.மு.கழகம் எனும் ஆலம் விருட்சமரத்தை கழக பொதுச் செயலாளராக இருந்து தாங்கள் எடுத்த தவறான முடிவுகளால் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு கழகம் கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், தற்போது நீங்கள் அறிவித்த கழக பொறுப்புகள் இதுபோல உள்ளது என கருதுகின்றோம்.

கழக பொதுச் செயலாளராகிய நீங்கள் எங்களுக்கு உறுதி அளித்தபடி மீண்டும் தலைமை ஏற்று இணைந்த பின்பும், அவர்கள் ஏற்கனவே வகித்த வந்த பதவிகளில் நியமிக்கபடாமல் காலதாமதம் செய்ததோடு தங்கள் விருப்பபடி பொறுப்புகளை நியமித்து 25.06.2026 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி கீழ்கண்ட நாங்கள் யாவரும் தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று கழகப்பணியில் எங்களை ஈடுபடுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள். தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம் என்பதை தங்களில் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.