முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருப்பூரில் கடத்தல் நாடகமாடிய பெண் உட்பட இருவர் கைது

கடத்தல் நாடகமாடி தலைமறைவாக இருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான பிரவீனா. இவரது கணவர் சேகர், ஆஸ்திரேலியோவில் பணியாற்றி வருகிறார். பிரவீனா, பல்லடம் – மங்கலம் சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். தாயார் பிலோமினா, சந்திரகுமார் என்பவரை 2- ஆவதாக திருமணம் செய்து கொண்டதால் பிரவீனா சண்டையிட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் பிலோமினா பல்லடம் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகள் பிரவீனாவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனாவை பல இடங்களில் தேடினர். அப்போது சிவக்குமார் என்பவர் தன்னை கடத்தி வைத்துள்ளதாகவும், உடனடியாக தன்னை மீட்கும்படி பிரவீனா வீடியோவில் பேசுவது போலும், வீடியோ ஒன்றை அவரது வளர்ப்பு தந்தை சந்திரகுமார் போலீசாரிடம் கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பல்லடம் டிஎஸ்பி சவுமியா அளித்த உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பிரவீனாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பிரவீனா ஈரோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பிரவீனாவை கண்டுபிடித்த போலீசார், பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரவீனா கடத்தப்படவில்லை. அவரே தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தல் நாடகத்தில் உடந்தையாக இருந்த சிவக்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பைனான்சியர் குமரேசன் என்பவர் பிரவீனா மற்றும் சிவக்குமார் மீது ஏற்கனவே பல்லடம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். ”பிரவீனா, சிவகுமார் மற்றும் தமிழரசு ஆகியோர் தன்னை தொழில் பார்ட்னர் ஆக்குவதாகக் கூறி ஏமாற்றி விட்டனர். மேலும் தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை ஈரோடு கருங்கல் பாளையத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து 2 கோடி ரூபாய் கடன் பெற்றனர். அந்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்” என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த கடன் பிரச்னையில் இருந்து தப்பிக்கவே பிரவீனா தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் சிவக்குமார் தன்னுடைய கணவர் என போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரவீனா, சிவக்குமார் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரவீனா, சிவக்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிவக்குமார், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரவீனாவை போலீசார் சிறையில் அடைத்தனர். கைதான பிரவீனா பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு தந்தை சந்திரகுமார் பதிவு செய்ததும், அதனை அவரே வெளியிட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் சந்திரகுமார் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்பு

Arivazhagan Chinnasamy

சொதப்பிய இந்தியா – சொல்லி அடித்த இங்கிலாந்து!

Web Editor

தமிழ்நாட்டில் 18 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

EZHILARASAN D