அழகு நிலையம் நடத்தி வந்த பெண் கடத்தலா? வைரலாகும் வீடியோ

அழகு நிலையம் நடத்தி வந்த பெண் தான் கடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் 28 வயதான…

அழகு நிலையம் நடத்தி வந்த பெண் தான் கடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் 28 வயதான பிரவீனா. இவரது கணவர் சேகர், ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். பிரவீனா பல்லடம் – மங்கலம் சாலை பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பிரவீனாவை கடந்த 3 நாட்களாக காணவில்லை, அவளை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் சிலோமீனா, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இதற்கிடையில், பிரவீனா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பிரவீனா, தனது பியூட்டி பார்லருக்கு வாடிக்கையாளராக வந்து செல்லும் செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வகையில் தமிழ் செல்வியின் கணவர் சிவகுமாரின் அறிமுகம் கிடைத்தது.

பின்னர் சிவக்குமார் தன்னிடம், நாம் இருவரும் பாட்னராக இருந்து டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று கூறினார். அதனை நம்பி தனது வீட்டு பத்திரத்தை சிவகுமாரிடம் வழங்கினேன். அதனை பெற்றுக் கொண்ட அவர் வங்கியில் அடமானம் வைத்து 3 கோடியை 75 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தனது வீடு ஏலத்துக்கு வந்தது. சிவகுமாரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, தொழில் விஷயமாக வெளியூர் செல்லலாம் என்று சிவகுமார் தன்னை அழைத்து சென்றதாகவும், பின்னர் திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

தன்னை எப்படியாவது சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள். உங்களை சொந்த அண்ணனாக நினைத்து கேட்கிறேன். அவன் என்னை மிகவும் சித்ரவதை செய்கிறான். நாள்தோறும் என்னை கெஞ்ச வைக்கிறான். அவனிடம் இருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள். வேறு எங்கும் செல்ல இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டான். எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறு பிரவீனா அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதனை அறிந்த பல்லடம் போலீசார் பிரவீனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருச்சியில் அவர் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று கண்டறிய பல்லடம் போலீசார், திருச்சி போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.