“தற்போது தமிழகத்தில் மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜி ஆகிறது. மனுநீதி
சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை. ஏழை எளியோருக்கு மருத்துவம்
கிடைப்பது போல் சிறப்பான சட்ட உதவியும் கிடைக்க வேண்டும்” என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல்
உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இதில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்தது நடைபெற்ற நிகழ்வில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது போல் சிறப்பான சட்ட உதவியும் காலத்துடன் கிடைக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் நீதி கிடைக்க நீதித்துறை செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிக்கு வாக்கு மூலதனம், வழக்கறிஞருக்கு நாக்கு மூலதனம். எனவே சரியாக
வாதம் செய்தால் எந்த வழக்கையும் வெற்றி பெற முடியும். மேலும் பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த
பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை.
ஆனால், தற்போது தமிழகத்தில் மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக உள்ளது என்றார் தமிழிசை செளந்தரராஜன்.








