கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு இமானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் அருகே உள்ள கழிவு நீர் தொட்டி மற்றும் கழிவறையை சுத்தம் செய்வதற்காக மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர் கோவிந்தன் மற்றும் தற்காலிக பணியாளர் சுப்புராயலு ஆகிய இருவரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மீஞ்சூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்த இருவரையும் மேலே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதால், அங்கிருந்த சுவற்றின் இடிபாடுகளை இடித்து அகற்றிய பின்னர் உடல்களை மீட்டனர்.

இதனையடுத்து மீட்க்கபப்ட்ட இருவரது உடல்களையும், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் பள்ளித் தாளாளரும், நிர்வாகியுமான சைமண்டி விக்டர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மே தின நாளில் தொழிலாளர்கள் இருவரும் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்யும் பணிக்காக வந்து, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.