பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி கூறியிருப்பதை மறுத்துள்ள மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜாக் டோர்சி தலைமை வகித்தபோது அவரும், அவரது குழுவினரும் இந்திய சட்டத்தை தொடர்ந்து மீறி செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு, கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேல் தொடர்ந்த போராட்டத்தையடுத்து, அவரக்ளின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயிகளின் நலனுக்காகவே அந்த 3 சட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் அவர்களே வேண்டாம் என சொல்லும் போது எதற்காக அந்த சட்டம் என கேட்டு அதை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனபின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு பிறகு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அன்று, பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு ட்விட்டரின் முன்னாள் CEO-வாக இருந்த ஜாக் டோர்சி அளித்த பேட்டியில், அவரிடம் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து அவர் பெற்ற அழுத்தங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய ஜாக் டோர்சி, “நான் ட்விட்டர் CEO-வாக பொறுப்புவகித்திருந்த சமயத்தில் பல வெளிநாட்டு அரசுகள் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்திருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடந்திய போது, அதுதொடர்பாக, மத்திய அரசிற்கு எதிராக பதிவுகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் கோரிக்கைகளும், அழுத்தங்களும் வந்தன.
மேலும் உங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை அதாவது ரைடு நடத்துவோம். நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்கள் அலுவலகங்களை மூடுவோம் என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். பிறகு வேறு வழியின்றி அவர்கள் சொன்னதை நாங்கள் செய்தோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று கூறுகிறோம். இதுதான் இந்தியாவா…. இதுதான் ஜனநாயகமா… என்று ஆதங்கத்தோடு கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜாக் டோர்சியின் இந்த கருத்துகளை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இது அப்பட்டமான பொய் என நிராகரித்துள்ளதோடு, தனது ட்விட்டரில் அவர் எழுதியுள்ள பதிவில் “டோர்சி மற்றும் அவரது குழுவினரின் கீழ் ட்விட்டர் வலைத்தளம் இயங்கி வந்தபோது தொடர்ந்து இந்திய சட்டத்தை அவர்கள் மீறி வந்தனர். சொல்லப்போனால் அவர்கள் 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய சட்டத்திற்கு இணங்கவே இல்லை. நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 14 மற்றும் 19-வது விதிகளை தொடர்ந்து அவர்கள் மீறி வந்தனர். பிறகு ஜூன் 2022 க்கு பிறகுதான் இந்திய சட்டத்துக்கு இணங்கி செயல்பட துவங்கினர். அதே போல் இந்த விவகாரத்தில் ட்விட்டர் ஊழியர்கள் யாரும் சிறைக்கு செல்லவில்லை, மேலும் ட்விட்டர் அலுவலகமும் மூடப்பட்டவில்லை. அப்படி இருக்க டோர்சியின் பேச்சு முற்றிலும் தவறானது.
அதே போல் இந்தியாவின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் உரிமை அரசுக்கு எப்போதும் உள்ளது. அதனை இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் சட்டங்களை மதித்து பின்பற்ற வேண்டியது அவர்களது கடமை. இதில் குறிப்பாக, 2021 ஜனவரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது பல தவறான தகவல்கள் ட்விட்டரில் பரவின. இதனால் அரசாங்கம் ட்விட்டரில் பரவும் தவறான தகவல்களை அகற்றவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அந்தத் தகவல்கள் போலியான செய்திகளின் அடிப்படையில் பரப்பப்பட்டதால் அசம்பாவிதங்களை தடுக்க அரசு முயன்ற போது டோர்சி தலைமையின் கீழ் இயங்கி வந்த ட்விட்டர் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது.
அதனால்தான் ட்விட்டரில் இருந்து தவறான தகவல்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதே போன்ற நிகழ்வு அமெரிக்காவில் நடந்தபோது, அதை அவர்களே சரி செய்தார்கள். ஆனால், இந்தியாவில் அதை சரி செய்ய அவர்கள் முற்படவில்லை. இணைய பயன்பாடு என்பது நம்பகத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதோடு இதனை உறுதி செய்வதற்கான சட்டங்களுக்கும் இணங்க வேண்டும். அந்தவகையில், இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் இந்த விஷயத்தில் தெளிவாக இருங்கள்” என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
https://twitter.com/Rajeev_GoI/status/1668494730454507521?s=20
- பி.ஜேம்ஸ் லிசா










