சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சென்னை சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், துணிகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் எரிந்து நாசமாகின. சென்னை மிண்ட் தெருவில் ரத்தன்ராஜ்…

சென்னை சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், துணிகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் எரிந்து நாசமாகின.
சென்னை மிண்ட் தெருவில் ரத்தன்ராஜ் ஸ்கொயர் என்ற பெயரில் இரண்டு அடுக்கு  வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் துணிக்கடை, வெள்ளி பாத்திரக்கடை, எலெக்ட்ரிக்கல் கடை என 11 கடைகள் இயங்கி வருகின்றன. அதிகாலை 3.30 மணியளவில் இந்த வணிக வளாகத்தில் தீப்பிடித்து, கரும்புகை வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயானது பரவி  அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மீது பட்டு எரிந்ததில் கட்டிடம் முழுவதும் மளமளவென எரிய தொடங்கியது.
பின்னர் தகவலின் பேரில் 10 தீயணைப்பு வாகனங்களில் 80 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிடம் முழுவதுமாக தீ பரவியதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து, பின்னர் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும்  கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள், வெள்ளிப்பாத்திரங்கள் ஆகியவை தீயில் கருகி நாசமாகின.
இந்த தீவிபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி கட்டிகள் கருகி நாசமானது என யானைகவுனி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மின்கசிவு காரணமாக கடையில் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது டிரான்ஸ்பார்மர் எரிந்து கடைக்குள் தீப்பரவி விபத்து ஏற்பட்டதா? என யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.