“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தவெக ஆட்சி!” – எடப்பாடி பழனிசாமி சாடல்!

திருப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம், பெரியபாளையம் மாணவி மீதான தாக்குதல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு!

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை! ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா முதல்வர் விஜய் அவர்களே?

“All is Well CM?” – விஜய்க்கு கேள்வி!

கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்களாம். உங்கள் ஆட்சியில் “Is all Well CM?” குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா? உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்? பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.