தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழக மக்களே, உங்கள் தீர்ப்பிற்காக நான் தலைவணங்குகிறேன். என் மண்ணில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குரலில் எழுந்து நின்று, பின்வரும் கருத்துகளைத் தெளிவுபடுத்தியதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்:
1. வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கு ‘இல்லை’
2. வாரிசு அரசியலுக்கு ‘இல்லை’
மேலும், அரசியலில் ஒரு தலைமுறை மாற்றத்திற்கு ‘ஆம்’ என்று அவர்கள் வாக்களித்துள்ளனர். இம்மாற்றத்தை யார் சாத்தியப்படுத்தியிருந்தாலும், அவர்கள் உண்மையில் அனைவருக்கும் ஒரு பெரும் நன்மையையே செய்துள்ளனர்.
தமிழக அரசியலில் மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைப் பெற்றதற்காக, தவெக-விற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ள நற்பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக இருப்பாராக.
மேலும், NDA கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்; களத்தில் இது ஒரு மிகக் கடுமையான போராட்டமாக அமைந்திருந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்; இம்முறை வெற்றியைப் பதிவு செய்ய இயலாதவர்கள் எவரும் மனம் தளர வேண்டாம், நாம் தொடர்ந்து போராடுவோம்.
இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்த மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் எனது வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதியாகவும், மிக முக்கியமாகவும், களத்தில் அயராது உழைத்த தமிழ் நாடு பாஜக தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சிறந்த காலங்கள் விரைவில் நம்மைத் தேடி வரும்” என்று கூறியுள்ளார்.







