துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த மக்களை நினைத்து வேதனைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாட்டிலும் சிரியாவிலும் நேற்று மட்டும் மொத்தம் 2300 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. துருக்கியில் பலி எண்ணிக்கை 1500, சிரியாவில் பலி எண்ணிக்கை 800 ஆக இருந்தது. இந்த நிலையில் அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர்ப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..

”துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த பேரழிவில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரண்டு நாட்டு மக்களையும் நினைத்து எனது இதயம் வேதனைக்குள்ளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
– யாழன்







