காந்தாரா 100-வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நீங்கள் பார்த்தது உண்மையில் காந்தாரா படத்தின் பாகம் 2. காந்தாரா பாகம் 1 அடுத்த ஆண்டு வரும் என தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியான இத்திரைப்படம், விமர்சனரீதியாக மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, நல்ல வசூலையும் குவித்ததால், படத்தை மற்ற மொழிகளிலும் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்தது.
அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியானது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து காந்தாரா திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப் படக்குழு திட்டமிட்டது. அதன்படி விருது பரிந்துரைக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டதாகப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட படக்குழு படம் குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது.
அப்போது ரிஷப் கூறுகையில், “கந்தாராவுக்கு அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் காட்டிய பார்வையாளர்களால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எல்லாம் வல்ல தெய்வத்தின் ஆசியுடன் இப்படம் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
மேலும், “நீங்கள் பார்த்தது உண்மையில் காந்தாரா படத்தின் பாகம் 2. காந்தாரா பாகம் 1 அடுத்த ஆண்டு வரும். காந்தாரா படத்தின் கதைக்கு வரலாற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால், காந்தாராவின் படப்பிடிப்பிலிருந்தபோது என் மனதில் இந்த யோசனை தோன்றியது. இன்னும் கதைக்கான பணி நடந்து கொண்டிருப்பதால், படத்தைப் பற்றிய விவரங்களைப் பின்னர் வெளியிடுகிறேன்” என்றார்.
ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பாகத்தைப் போலல்லாமல், காந்தாரா பாகம் இரண்டு சுமார் 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.







