திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்து குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் தினந்தோறும் பெருமாள் அனுமந்த வாகனம்,கருட வாகனம், சேஷ வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வீதியுலா இன்று காலையில் வெகுவிமர்சையாக அரங்கேறியது. முன்னதாக கோயில் தேர்த்தட்டில் காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க,வாணவேடிக்கைகள் ஒலிக்க காலை 8.30மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு உற்சாகமாக தேரை இழுத்தனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும்வண்ணம் தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
வேந்தன்








