இந்திய சினிமாவின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருதை’ பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படவுள்ளது.
வஹீதா ரஹ்மான் ஒரு அழகான நடிகை மற்றும் திறமையான நடனக் கலைஞராக திரையுலகில் அறியப்படுகிறார். அவர் காலத்தின் சிறந்த நடனக் கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. இது தவிர, அவரது வலுவான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனம் காரணமாக, அவர் பாலிவுட் வரலாற்றில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
வஹீதா ரஹ்மான் 1938-ம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்தார். வஹீதாவின் தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கலெக்டராக இருந்தார். மிக இளம் வயதிலேயே தன் சகோதரியுடன் பரதநாட்டியப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். அவர் முதன்முதலில் இந்திய வைஸ்ராய் முன் நிகழ்ச்சி நடத்தி, வெளிச்சத்திற்கு வந்தார். பிரபல திரைப்பட இயக்குநர் குரு தத், வஹீதா ரஹ்மானால் மிகவும் ஈர்க்கப்பட்டார். சிஐடி படத்தில் தேவ் ஆனந்துக்கு ஜோடியாக வஹீதாவை நடிக்க வைத்தார். இதற்குப் பிறகு, குரு தத் தனது பியாசா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் வஹீதாவின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
குரு தத்தின் வாழ்க்கையின் மிகவும் பேசப்பட்ட படமான காகஸ் கே பூலில், அவர் வஹீதா ரஹ்மானை முன்னணி கதாநாயகியாக தேர்வு செய்தார். இதற்கிடையில், குரு தத் மற்றும் வஹீதா ரஹ்மான் இடையேயான காதல் பற்றி பல வதந்திகள் வந்தன. இது தத் குடும்ப வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், இருவரும் சௌதவின் கா சந்த் மற்றும் காகஸ் கே பூல் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். காகஸ் கா பூலில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், வஹீதாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
குருதத் தவிர, தேவ் ஆனந்துடன் பல வெற்றிப் படங்களையும் கொடுத்தார். சிஐடி, காலா பஜார், கைடு மற்றும் பிரேம் பூஜாரி போன்ற சூப்பர்ஹிட் படங்கள் இதில் அடங்கும். இது தவிர, திலீப் சாகேப்புடன் ராம் அவுர் ஷ்யாம், ஆத்மி போன்ற வெற்றிப் படங்களையும் செய்தார். இது மட்டுமின்றி, ஷோமேன் ராஜ் கபூருடன் அவர் நடித்த தீஸ்ரீ கசம் படமும் வெற்றி பெற்றது. குறிப்பாக 1955 ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தமிழ்த் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் இவர் நடித்துள்ளார்.
1970-க்குப் பிறகு, அவர் பாகுன் படத்தில் ஜெயா பச்சனின் அம்மாவாக நடித்தார். இதற்கு காரணம் இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு பல படங்களில் அம்மா வேடத்தில் மட்டுமே வாய்ப்புகள் வர ஆரம்பித்தது தான்.
ஷகுன் படத்தில் நடித்த கமல்ஜீத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் வஹீதா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். திரிசூல், கபி கபி மஷால், நமக் ஹலால் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் வஹீதா. 1991 ஆம் ஆண்டு வெளியான லாம்ஹெய்ன் படத்திற்குப் பிறகு, வஹீதா சுமார் 12 ஆண்டுகள் படங்களில் இருந்து விலகி இருந்தார். வஹீதா ரஹ்மான் தனது அடுத்த இன்னிங்ஸிலும் வெற்றி பெற்றார்.
டெல்லி 6, ரங் தே பசந்தி போன்ற படங்களில் பணியாற்றினார். வஹீதா பாலிவுட்டின் பல்துறை கதாநாயகிகளில் ஒருவராக கருதப்படுகிறார். கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வஹீதா ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
https://twitter.com/ianuragthakur/status/1706565710540083673
திரையுலகிற்கு தாதாசாகேப் பால்கே விருது மிகவும் மதிப்புமிக்கது. இந்நிலையில், இந்த முறை, மூத்த பாலிவுட் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்திய சினிமாவில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த ஆண்டு மதிப்புமிக்க தாதாசா- கேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வஹீதா ரஹ்மான் ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.







