சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்த சார்பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள சார்பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பிறகு, திருவல்லிக்கேணி பத்திரப்பதிவு அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மோசடி ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. மோசடி ஆவணம் மூலம் பெறும் நிலங்களை, நில உரிமையாளர்களுக்கே திரும்ப வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு அல்லது ரத்து செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
பிறகு, அண்ணா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அதிக அளவிலான பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் காத்திருக்க வைக்கபட்டதன் காரணத்தை சார்பதிவாளரிடம் கேட்ட அமைச்சர் அவரை கடிந்து கொண்டார்.
பின்னர், ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, பொதுமக்களை காக்க வைத்தது, பணியை சரியாக செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காக சார்பதிவாளர், தகவல் பதிவாளர் அகிலா, எழுத்தர் ப்ரவின், உதவியாளர் முருகேசன், லட்சுமணன் தலைமை அலுவலர் சம்பத் உள்ளிட்டவர்களை பணியிட மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.







