பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல்
கல்லூரிகள் அமைக்க முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னைப் பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி
ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள்
கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை
இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப்
சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு போட்டி வைப்பது போல தமிழ்நாடு அமைச்சர்களுக்குள் பெரிய போட்டி
நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள
கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை
பொறுப்பேற்றது முதல் சவாலான நேரம். கொரோனாவைத் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருகிறது. அமைச்சர் சுப்பிரமணியனின் பணி குறித்து நான் வியப்படைந்தது உண்டு.
சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும்
மாநகராட்சி நல்லா வேலை செய்தால் தான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும்.
119 தொடக்கப்பள்ளி 92 நடுநிலை பள்ளிகள் 38 உயர்நிலை என மொத்தம் 281 பள்ளிகளில்
ஒரு லட்சத்து நான்காயிரத்து 743 மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி பள்ளி ஏழை எளிய நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு உதவிகரமாக
உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு தயார் செய்யுங்கள். உங்களுக்கு வேண்டிய
அனைத்து வசதிகளையும் நாங்கள் தயார் செய்து தருகிறோம்.
மாநகராட்சிக்கு கலை அறிவியல், பொறியியல் மருத்துவ கல்லூரி வேண்டும் என அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தென் சென்னையில் மருத்துவ கல்லூரி அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முதல்வர் ஒத்திசைவு கொடுத்துள்ளார்.
மாநகராட்சியில் 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களது பிள்ளைகள் படிப்பதற்கு
மாநகராட்சி கல்லூரியில் 32% இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் மாநகராட்சி
மேலும் உத்வேகத்துடன் செயல்படும்.

மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள். உங்களுக்கு பதவி உயர்வு,
ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி செய்து தரும்.
சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க
வேண்டும்.முன்னோடி மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ள மாநகராட்சியில் இணையாக நாம் செயல்பட வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி
செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள
குழிகளை பருவமழைக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார் அமைச்சர் கே.என்.நேரு.







