ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எந்த கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவிற்கு வந்தாலும் அரவணைப்போம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தொடர்ந்து வளர்ந்து கொண்டே வரும் கட்சி என்றார். திமுக என்பது பாரம்பரிய இயக்கம் என்றும் ஆலமரத்தை போன்று வளர்ந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படும் நிலையில், அவர் திமுக-வில் இணைந்தால் ஏற்று கொள்வீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தியாவிலேயே திமுகவோடு ஒப்பிட மாற்றுக்கட்சி என்பது இல்லை என்றார்.
திமுக-விற்கு யாரும் வருவது வராதது என்பது அவர்களது சொந்த விருப்பம் என கூறினார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வதாகவும் விளக்கமளித்தார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அல்ல எந்த கட்சியினர் திமுக-விற்கு வந்தாலும் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளோம் என்றும் மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தால் நிச்சயமாக இணைத்து கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








