திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அமோனியா நச்சு வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 83 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்த விபத்தில் இதுவரை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 11 பேரும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேரின் சடலங்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது. இதில் 8 சடலங்கள் ஒடிசா மாநிலத்திற்கும், 2 சடலங்கள் அசாம் மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 3 சடலங்கள் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பிறகு சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் 4 மருத்துவமனைகளில் 43 தொழிலாளர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும்
தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




