கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நியூஸ்7 தமிழ் நடத்தும் ”ஊரும் உணவும்” எனும் உணவுத் திருவிழா தொடங்கியது.
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி மதுரையில் முதன் முதலாக ஊரும் உணவும் திருவிழா நடைபெற்றது. மக்களின் பேராதரவோடு மதுரையில் நடைபெற்ற ஊரும் உணவும் திருவிழா வெற்றியின் தொடர்ச்சியாக இந்த மாபெரும் உணவு திருவிழா ஓசூரில் இன்று தொடங்கியது.
ஓசூர் முனீஸ்வரர் சர்கிள் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா பாரம்பரிய பறை இசையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவை தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதனையும் படியுங்கள் : நெய்சோறு, மட்டன் குழம்பு, பாயாசம்… துப்புரவு பணியாளர்களுக்கு விருந்தளித்து அசத்திய பஞ்சாயத்து தலைவர்
உணவு திருவிழாவிற்கு வருபவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும், பாரம்பரிய கலைகளை போற்றும் வகையிலும் நாட்டுபுற கலைஞர்களின் மயிலாட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு போட்டிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் விதவிதமான ஃபலூடா, மெர்சிலிஸ் ஐஸ் கிரீம், மணப்பாறை முறுக்கு, மூலிகை தேநீர், காரமடை முறுக்கு, ஆற்காடு மக்கன்பேடா, மதுரை மீன் பஜ்ஜி, முட்டை மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களில் மணிக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்வில் விழாவின் அரங்கை திறந்து வைத்து பேசிய தளி தோகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச் சந்திரன் “மாறிவரக்கூடிய உணவுப் பழக்கங்களுக்கு மத்தியில் நமது பாரம்பரிய உணவுகளை மீண்டும் நினைவு கூறும் வகையில் இந்த உணவுத் திருவிழாவை நியூஸ்7 தமிழ் ஏற்பாடு செய்துள்ளது. எனவே நியூஸ்7 தமிழுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் பேசிய நியூஸ்7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் தெரிவித்ததாவது..
“தமிழ்நாடு முழுவதும் அந்தந்த ஊரின் பெருமைகளை போற்றும் உணவுகளை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் நிகழ்வாக இந்த உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளோம். மதுரையில் கடந்த வருடம் நடத்திய உணவுத் திருவிழா மகத்தான வெற்றி பெற்றது. உணவுகள் மற்றும் மக்களின் சங்கமமாக அந்த நிகழ்வு அமைந்தது. அந்த நிகழ்வுக்கு எப்படி மதுரை மக்கள் எங்களுக்கு ஆதரவினைத் தந்துள்ளார்களோ அதேபோல ஓசூர் மக்களும் ஆதரவு தந்துள்ளனர்.
இந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக தொடங்க ஆதரவும், உதவியும் வழங்கிய காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிக்க நன்றி. அடுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு ஓசூர் மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் “ என நியூஸ்7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் குறிப்பிட்டார்.
– யாழன்







