நெய்சோறு, மட்டன் குழம்பு, பாயாசம்… துப்புரவு பணியாளர்களுக்கு விருந்தளித்து அசத்திய பஞ்சாயத்து தலைவர்

நெய் சோறு, மட்டன் குழம்பு, பாயாசம் என துப்புரவு பணியாளர்களுக்கு தடால் புடால் விருந்து அளித்த திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையுத்து பஞ்சாயத்து தலைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சுகாதாரத்தில் தூய்மை பணியாளர்களின்…

நெய் சோறு, மட்டன் குழம்பு, பாயாசம் என துப்புரவு பணியாளர்களுக்கு தடால் புடால் விருந்து அளித்த திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையுத்து பஞ்சாயத்து தலைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் சுகாதாரத்தில் தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக
இருக்கிறது. கை நிறைய சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் மேலும் அதிக சம்பளம்
கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது உண்டு. அந்தப் போராட்டத்தால்
மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் மிக மிக குறைந்த ஊதியம்
வாங்கும் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த
சமுதாயத்தின் சுகாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.

இதுபோன்ற உன்னதமான பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு சமுதாயத்தில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. குறிப்பாக பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், சமுதாயத்தில் மரியாதை வேண்டும் என்பது அவர்களின் நியாயமான கோரிக்கையாகும். ஆனால், பெரும்பாலான இடங்களில் தூய்மை
பணியாளர்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட யாரும் உரிய மரியாதை கொடுப்பதில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனக்கு கீழ் பஞ்சாயத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு விருந்து அளித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பீர் முகைதீன். தாழையூத்து ஊராட்சியில் மொத்தம் 13 கிராமங்களில் சுமார் 18,000 மக்கள் வசித்து வருகின்றனர். அதே சமயம் இந்த பஞ்சாயத்தில் வெறும் ஒன்பது துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

நாள்தோறும் குப்பை நாற்றத்திற்குள் பொழுதை கழிக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்க ஊராட்சித் தலைவர் பீர் முகைதீன் முடிவெடுத்தார். அதன்படி, இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து துப்புரவு
பணியாளர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்து என்றால்
ஏதோ சாப்பாடு, சாம்பார், அவியல் தான் இருக்கும் என நினைத்து சென்ற துப்புரவு
பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

பஞ்சாயத்து தலைவர் பீர்முகைதீன் துப்புரவு பணியாளர்களை இருக்கைகளில் அமர வைத்து,  வாழை இலையில் தானே பரிமாறத் தொடங்கினார். நெய் சோறு,  மட்டன் குழம்பு, பாயாசம் என தடபுடலாக சாப்பாடு வழங்கியதை கண்டு துப்புரவு பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் பீர்முகைதீனிடம் கேட்டபோது, துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி இருந்தார். நான் அவரது அறிவுறுத்தலை ஏற்று துப்புரவு பணியாளர்களை கெளரவித்தேன். துப்புரவு பணியாளர்கள் மிக குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரம் இல்லாமல் வேலை செய்கின்றனர். எனவே, அவர்களின் மனம் மகிழ்ச்சிக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்திருந்தேன்.  உணவை சாப்பிட்ட துப்புரவு பணியாளர்கள் எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டதில்லை என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர் என்றார்.

குறிப்பிட்ட சமுதாய கண்ணோட்டத்தோடு துப்புரவு பணியாளர்களை வேலை வாங்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மத்தியில் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்த பஞ்சாயத்து தலைவர் பீர் முகைதீனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.