”நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தமிழக நதிநீர் பிரச்னை, நீட் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரிக்கை!” – கனிமொழி எம்.பி பேட்டி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தமிழக நதிநீர் பிரச்சனை, நீட் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தமிழக நதிநீர் பிரச்சனை, நீட் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கலந்து கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி கூறுகையில்,  எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த சிறப்பு கூட்டத்திற்கான நோக்கம் என்னவென்று கேள்வி முன் வைக்கப்பட்டது.

தெளிவில்லாத வகையில் இந்த சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதேபோல மற்ற எதிர்க்கட்சிகளும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதை தவிர திமுக சார்பில் தமிழக நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் , மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தப்பட வேண்டும் , நீட் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக தெளிவு இல்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கான நேரம் குறைவாக உள்ளதால் தேர்தல் தொடர்பான மசோதா கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் அவசியம் தற்போதைக்கு இல்லை. மணிப்பூர் விவகாரம், நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.