ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவில், இந்தியா சார்பில் 20 வீரர், வீராங்கனை களும், 6 அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது ஒலிம்பிக் போட்டியான இது, நாளை (23-07-201) வெள்ளிக்கிழமை மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது.
கொரோனா காரணமாக, தொடக்க விழாவில் பங்கேற்க ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வரும் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 6 அதிகாரிகள் மட்டுமே அந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீரர், வீராங்கனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தியா சார்பில் 6 அதிகாரிகளும் 20 வீரர், வீராங்கனைகளும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து மொத் தம் 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் இவர்கள்தான்.
மொத்தம் 18 போட்டிகள் இவர்கள் பங்கேற்கிறார்கள். இதில், துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மின்டன், வில்வித்தை, ஹாக்கி போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.








