சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, சுதர்சன நாச்சியப்பன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததாலும், சரியான தகவல்கள் இல்லாததாலும், தேசிய அளவில் ஒதுக்கப்படும் இடஒதுக்கீடுகளை, தமிழ்நாட்டில் உள்ளவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பால் தான், ஆங்கிலேயர் ஆட்சியில் 100% இடஒதுக்கீடு சாத்தியமானது. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள், சமூக நீதிக்கு எதிரானவர்கள். இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு மக்களின் சமூக நிலை, கல்வி நிலை மற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில் வழங்குவது.
இதுவரை 6 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அது தொடர்ந்திருந்தால் சமூகநீதி ஒழுங்காக இருந்திருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு சரியாக நடத்தப்பட்டிருந்தால் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னேறி இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டால்தான் சமூகநீதியை நிலைநிறுத்த முடியும். கர்நாடகா, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன் விளைவாக அங்கு ஏற்படும் வளர்ச்சியை நம்மால் பார்க்க முடிகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை. அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசிய போதும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறோம் என்று சொன்னார். ஆனால் எடுக்கவில்லை. மத்திய அரசிடம் மாநில அரசு முறையிடுவது, கையில் வெண்ணெய்யை வைத்து கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது.
இதையும் படியுங்கள் : மருது பாண்டியர்களின் தியாகத்தை நாம் மறந்துவிட்டோம்..! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சமூக நீதி எண்ணம் இருந்தால் முதலமைச்சர் இவ்வாறு செய்யமாட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்க்க முடியாது. முந்தைய காலங்களைவிட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை இன்று ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. சமூகநீதியே எங்கள் உயிர் மூச்சு என கூறும் திமுக, இதைப்பற்றி மூச்சே விடவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை.
45 சமூக தலைவர்களை வைத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அன்று சந்தித்தேன். தற்போது அவரின் மகனை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தந்தே ஆக வேண்டும். முதலமைச்சர் மீது பழி ஏற்படக்கூடாது என்ற அக்கறையில் தான் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.








