குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்த கோரிக்கை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து அம்மாநிலங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது இயல்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மொத்தமுள்ள 29 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 52 விண்ணப்பங்கள் குவிந்தன.
இதற்கான நிபுணர் குழு மொத்தம் 21 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மட்டுமே தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநில வாகனங்களை அணிவகுப்பில் பங்கெடுக்கச் செய்ய வலியுறுத்தின.
இது சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய பொதுப்பணித்துறை இன்று விளக்கமளித்திருந்தது. அதில், “அலங்கார ஊர்திகள் பங்கேற்பது குறித்த முடிவை நிபுணர் குழுவே தீர்மானிக்கும். மத்திய அரசு அல்ல என்றும், நேரக் கட்டுப்பாடு காரணமாக 56 விண்ணப்பங்களில் 21 மட்டுமே விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
அதேபோல தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகளுக்கான விண்ணப்பங்கள் உரிய விவாதங்களுக்குப் பின்னரே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசாங்கத்தின் தலைமையில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது.
பொதுவாக மாநில அரசுகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கென உள்ள நிபுணர்கள் குழு அலங்கார வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும். இந்த பரிசீலனை பல சுற்றுகளாக நடைபெறும். தமிழ்நாடு சார்பில் வழங்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் மற்றும் வரைகலை ஆகியவை மூன்றாவது சுற்றிலேயே தேங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்த அப்டேட் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு அதிகாரிகள் விளக்கம் கேட்டபோது தமிழ்நாடு மட்டுமல்ல பல மாநிலங்களின் சிறப்பு அலங்கார ஊர்திகள் அணிவகுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
முன்னதாக மத்திய அரசின் நிபுணர் குழுவின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இந்த கடிதமும் தற்போது நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. பல்வேறு சமூக மக்கள் வாழும் இந்தியாவில் இவ்வாறு குறிப்பிட்ட சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் பங்கேற்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







