நாட்டின் 72வது குடியரசுத் தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். இதனை தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநில கலைநிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் வாகன அணிவகுப்பு நடைபெறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேச ராணுவப் படையும் பங்கேற்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாகப் பலத்த கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வழக்கமாக, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளைக் காண 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்த முறை, வெறும் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காமல் குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் ஒன்றுகூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.