தமிழகத்தில் இதுவரை ரூ.319 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு பேசியதாவது, வாக்குப்பதிவுக்குத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகக் கூறினார். 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,20,807 (VVPAT) இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 89,185 அரசு ஊழியர்கள் தபால் வாக்கு கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு இதுவரை 1,85,057 தபால் வாக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1,14,205 வாக்கு எண்ணும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 1,45,667 தபால் வாக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
வீடு, வீடாக தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 537 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 319 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.







