முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தேர்தல் 2021 தமிழகம்

தமிழகத்தின் 10-வது முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்!


எழுத்து: எல்.ரேணுகா தேவி

இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர் 1951- ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதோடு இணைந்து மாகாணங்களுக்கானத் தேர்தலும் நடைபெற்றன. அப்போதைய சென்னை மாகாணம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளையும் தற்போதைய ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்ட பிறகு 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொடங்கி இதுவரை தமிழகம் 9 முதல்வர்களைக் கண்டுள்ளது.1957 -ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைபற்றி காமராஜர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 -ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலம், முதல்வராகத் தொடர்ந்தார். 1962 -ல் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வென்றது. காமராஜர் மீண்டும் முதல்வரானார். கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிய காமராஜர் 1963- ம் ஆண்டு பதவி விலகியதை அடுத்து அவர் ஆலோசனைப்படி எம்.பக்தவத்சலம் தமிழக முதல்வரானார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக மீது அரசு நடத்திய ஒடுக்குமுறைகளும் அப்போது ஏற்பட்ட அரிசி பஞ்சமும் ஆட்சியில், காங்கிரஸ் தொடர்வதைக் கேள்விக்குறியாக்கியது. பிறகு 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. முதல்வரான அண்ணாதுரை சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 1969 ஆம் ஆண்டு அவர் காலமானதை அடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.கருணாநிதி தேர்வானார். 1971-ல் நடைபெற்ற தேர்தலிலும் திமுக வெற்றிபெற்றது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். ஆட்சிக்காலம் முடியும் நேரத்தில்

மத்திய அரசின் அவசர நிலையை எதிர்த்ததற்காக, 1976 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் திமுக அரசு கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் திமுகவை விட்டு விலகிய எம்.ஜி.ஆர், 1972 ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவங்கினார். அவருக்கு இருந்த திரைப் புகழ் மற்றும் மக்கள் செல்வாக்கின் காரணமாக, 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் மீண்டும் முதல்வரானார். 1985 மற்றும் 1988 என அடுத்து நடந்த தேர்தல்களிலும் அவரே வென்றார். உடல் நலக்குறைவால் 1988 ஆம் ஆண்டு அவர் காலமானதையடுத்து அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

உட்கட்சி பூசல் காரணமாக அந்த ஆட்சி கவிழ்ந்ததால், 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானார். ஆனால் 1991 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் அதிமுக உட்கட்சி பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு ஜெயலலிதா அதிமுகவின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார். 1991- ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி தொடர்ந்தது.

1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. கருணாநிதி மீண்டும் முதல்வரானர். 2001 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். டான்சி வழக்கு காரணமாக, அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி வகித்தார். பிறகு 2002 மார்ச் முதல் மார்ச் 2006 வரை ஜெயலலிதாவே முதல்வராகத் தொடர்ந்தார்.


2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக ஆட்சியை பிடித்து கருணாநிதி மீண்டும் முதல்வரானார். 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக, அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் மே 2015 வரை முதல் பதவியிலிருந்தார். வழக்கிலிருந்து விடுபட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற்றது. 2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா காலமானதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வரானார். அதிமுகவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகினார். அதைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.


காமராஜர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி எனத் தமிழகம் இதுவரை ஒன்பது முதல்வர்களைக் கண்டுள்ளது. இந்நிலையில் நடைபெற்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் பத்தாவது முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியேற்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram