தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார். கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் 4 வருடங்கள் ஆகியும் எந்தவித முடிவும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார். விசாரணைக்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விசாரணை ஆணையம் எட்டு முறை அழைப்பு விடுத்தும் அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தது குறித்தும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வராததால் உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியவில்லை. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன், கதாநாயகி போல அமைந்துள்ளதாகவும் அதற்கு வில்லனாக அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருத்துகணிப்புகளில் திமுக கட்சியே ஆட்சியை பிடிக்கும் என தகவல் வெளியாகி வருவதாக கூறிய அவர், எதிர்கட்சியே இல்லாத வகையில்
திமுக வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்திடும் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுகவின் வெற்றி தற்போதே உறுதி செய்துள்ளதாகவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக நாமக்கல் ஆஞ்நேயர் கோவில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.







