சென்னை தொகுதிகளில் போட்டியிடும் சினிமா பிரபலங்கள் யார்.. யார்? அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்திப்பிரிவின் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.
அரசியல் கட்சிகள் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் தேர்தல் களத்தை அழகாக்குபவர்கள் வேட்பாளர்கள் தான். தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் கூறப்பட்டிருக்கின்றன என்பதையும் கடந்து திரைத்துறையைச் சேர்ந்த வேட்பாளர்கள் யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்கிற எதிர்பார்ப்பே, வாக்களிக்கக் காத்திருக்கும் மக்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கும்.
அந்த வகையில், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் பின்புலம் கொண்டவர்களை பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்திருக்கிறது சினிமா பின்னணி கொண்டவர்களின் பட்டியல். தமிழக சட்டமன்றத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என 5 முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், இந்த கட்சிகள் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் திரைத்துறை சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு

அவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருவர் குஷ்பு. பாஜகவில் இணைந்தது முதலே சட்டப்பேரவை தேர்தலில் குஷ்புவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டது. இதேபோன்று, நடிகை கவுதமிக்கு சீட் கிடைக்கும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், குஷ்புவுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது பாஜக தலைமை. ஆம், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறது அக்கட்சித் தலைமை.
1996, 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில், ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார் மு.க.ஸ்டாலின். இதனால் ஒரு கட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி, ஸ்டாலின் தொகுதி என அழைக்கப்பட்டதும் உண்டு. அந்த தொகுதியில் இருந்து திமுக சார்பில் தேர்வான கு.க.செல்வமும் பாஜகவில் இணைந்ததால், தற்போது திமுக சார்பில் மருத்துவர் எழிலன் நிறுத்தப்பட்டிருக்கிறார். திட்டக்குழு துணைத் தலைவராக இருந்த நாகநாதனின் மகன் மருத்துவர் எழிலன். இவரை, எதிர்த்தே அதிமுக கூட்டணியில் போட்டியிடும் குஷ்புவை களமிறக்கியிருக்கிறது பாஜக. இதனால், 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் நட்சத்திர தொகுதி என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறது ஆயிரம் விளக்கு தொகுதி.
கருணாநிதி பேரன் நிற்கும் தொகுதி

இதேபோன்று, திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதியில், திமுக தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், உதயநிதி ஸ்டாலின் களமிறக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும், ஒரு நடிகராகவும், படத் தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திய உதயநிதி, அண்மைக்காலங்களில் திமுகவின் இளைஞரணிக்கு புது தெம்பூட்டினார். இதனாலேயே அவருக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஹ்மான்கான் காலத்தில் இருந்தே திமுகவின் வசம் இருக்கும் தொகுதி என்பதும், 1996, 2001, 2006 என 3 முறை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதும், உதயநிதி ஸ்டாலினுக்கு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா

அதிமுக, திமுகவைத் தாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பிலும் சினிமா பிரபலங்கள் பலர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நட்ராஜ், திமுக வேட்பாளர் த.வேலு உள்ளிட்டோரை எதிர்த்து நடிகையும், மக்கள் நீதி மய்ய தலைமை பேச்சாளருமான ஸ்ரீபிரியா களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அக்கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறக்கப்பட்டார். இதேபோன்று கவிஞர் சினேகனும் மக்கள் நீதி மய்யம் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். 2019 மக்களவை தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சினேகன், இந்த முறை விருகம்பாக்கம் தொகுதியில் வாக்குகேட்டு வருகிறார். ஆனால், விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியிருக்கிறார் நகைச்சுவை நடிகர் மயில்சாமி.
திருவொற்றியூரில் சீமான்

திரைத்துறையில் இருந்து சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோர் வரிசையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமானையும் இணைத்து பார்ப்பது அவசியம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திருவொற்றியூரில் இப்போது களம் காணும் சீமான், நாம் தமிழர் கட்சியில், 117 தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கி அசத்தியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திரை நட்சத்திரங்களின் புகழ்வெளிச்சம் அவர்களை அறிமுகப்படுத்தவே உதவும். ஆனால் வெற்றிக்கு அவர்களுடைய கட்சி கொள்கைகளும், மக்களுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கமும், பிணைப்புமே வழிவகுக்கும். அந்த வகையில், நிமிடத்துக்கு நிமிடம் மாறும் அரசியலில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், வெற்றி யாருக்கு என்பதை அறிய பொறுத்திருப்போம்…