G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வாகனங்களின் நம்பர் ப்ளேட்களில் அரசு என்பதைக் குறிக்கும் ‘அ’ என்ற வார்த்தையோ அல்லது Government என்பதை குறிக்கும் G என்ற சொல்லோ இடம்பெற்றிருக்கும். ஆனால், அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் நம்பர் ப்ளேட்களில் இவ்வாறான எழுத்துக்கள் எழுதப்பட்டும், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின்படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே G அல்லது அ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது ’அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement: