பீகாரில் காதலியை இருட்டில் சந்திப்பதற்காக, கிராமத்தின் முழு மின் இணைப்பையும் இளைஞர் துண்டித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
காதலுக்கு கண்ணில்லை, என்பது போல சமீபகாலமாக காதலுக்கு எல்லையில்லை என்னும் அளவிற்கு பல சேட்டைகளை செய்து வருகின்றனர் காதலர்கள். தாங்கள் செய்யும் சேட்டைகள் அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்குமா இல்லையா என்பதனை யோசிக்காமல் பல செயல்களை செய்து வசமாக மாட்டிக்கொள்கின்றனர்.
பீகாரின் பூர்னியாவில் இதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் இருளின் மறைவில் தனது காதலியைச் சந்திப்பதற்காக ஒரு கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளார். மேலும், அவர் எப்போதெல்லாம் காதலியை இருட்டில் சந்திக்க விரும்புகிறாரோ அப்போதெல்லாம் கிராமத்தின் முழு மின் இணைப்பையும் துண்டித்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தில், தினமும் தொடர்ந்து இதுபோன்று மின்சாரம் இல்லாமல் போவதை கண்டு கிராம மக்கள் பலமுறை மின்சார அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஆனால், மின்சாரம் அவ்வாறு நிறுத்தப்படவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உண்மையை கண்டறிய முயன்ற கிராம மக்கள் மின்சாரத்தை யார் துண்டிக்கிறார்கள் என்பதனை ஆதரங்களுடன் கண்டுபிடித்துள்ளனர்.
எலக்ட்ரீஷியன் ஒருவர் தனது காதலியை இருளில் சந்திப்பதற்காக கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்துக்கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு, பிடிபட்ட நபரை கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக அழைத்துச்சென்று தண்டித்துள்ளனர். இறுதியில், கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: