வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு அன்றைய நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. போராட்டம் நடைபெறும் நாட்களில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயல் எனக்கூறியுள்ள போக்குவரத்துத் துறை, இதனை மீறி போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.