மேற்குவங்க மாநிலத்தின் பிர்பூம் வன்முறையில் உயிரிழந்த 8 பேரும் அடித்து எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரது சொந்த ஊரான பிர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் வெடித்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். தற்போது அவர்களின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அவர்கள் அடித்து எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்த மம்தா பானர்ஜி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயும், சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்க தலா 2 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பாக திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அனருல் ஷேக்கை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட மம்தா பானர்ஜி, கொலையில் சந்தேகப்படும் நபர்கள் சரணடையாவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.








