சபாநாயகராக அப்பாவு அதிகாரப்பூர்வமாக தேர்வு!

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.…

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தில் சபாநாயகர் தேர்வு மற்றும் துணைச் சபாநாயகர் தேர்வு ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகர் பதவிக்கு ராதாபுரம் தொகுதியிலிருந்து இதுவரை 4 முறை எம்எல்ஏவாக தேர்வுச் செய்யப்பட்ட அப்பாவு வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவிக்கு கீழ்பென்னத்தூர் திமுக எம்எல்ஏ மற்றும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு சட்டப்பேரவையின் தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்தார். “அப்பாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பணி முடிந்தது” என தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறினார்.

தமிழக 16-வது சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக அப்பாவு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். அவரை பேரவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் சட்டப்பேரவை மரபுப்படி சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.

திருநெல்வி மாவட்டத்திலிருந்து சபாநாயகர் பதவிக்கு 5 வது நபராக அப்பாவு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகராகப் பதவியேற்றுக்கொண்ட அப்பாவு துணைச் சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்ட கு.பிச்சாண்டிக்கு துணைச் சபாநாயகராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழக அரசின் 16-வது சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.