இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கேரளப் பெண் உள்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே வெகு காலமாக மோதல் நீடித்து வருகிறது. தலைநகர் ஜெருசலேமிற்கு, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் உரிமை கோருவதே இந்த மோதல் ஏற்பட முக்கிய காரணம். கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் தொடங்கியது. பாலஸ்தீனத்தின், காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் உள்பட 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவியது. இந்தத் தாக்குதலில் கேரளப் பெண் சவுமியா உள்பட 33 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டானியா ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ‘இன்னும் அதிகமாக வான்வெளி தாக்குதல் பாலஸ்தீனம் மீது நடத்தப்படும். ஹமாஸ் அமைப்பு எதிர்பார்க்காத அளவுக்கு அவர்களைத் திருப்பி தாக்குவோம்’ என்று அவர் தெரிவித்தார்.







