திருத்துறைப்பூண்டியில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கான இலவச நீர், மோர் பந்தலை தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அவ்வப்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும் வேலை நிமித்தம் வீட்டை விட்டு வெளியே வருவோர், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர்.
இந்நிலையில் தன்னார்வலர்கள் அதிகளவில் நீர்,மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் திருத்துறைப்பூண்டியில் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
இலவச நீர்,மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து திறந்து வைத்தார்.
மேலும் இந்த பந்தல் திறப்பு விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி, மோர் உள்ளிட்டவற்றையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஆணையர் பிரதான் பாபு உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
– வேந்தன்







