தொடரும் சிங்கத்தின் கர்ஜனை… – கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத்…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், டெவான் கான்வேயும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கத் தொடங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். டெவான் கான்வே 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படியுங்கள் : கானக் குரலால் மக்களைக் கவர்ந்த எவர்கிரீன் பாடகி எஸ்.ஜானகி!

இதையடுத்து கைகோர்த்த ரஹானே – துபே ஜோடியும் பந்துகளை நான்கு பக்கமும் சிதறடித்தனர். ரஹானே 29 பந்துகளில் 71 ரன்களும், துபே 21 பந்துகளில் 50 ரன்களும் விளாசினர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 26 பந்துகளில் 61 ரன்களும், ரிங்கு சிங் 33 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர். இவ்வாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.