ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆதிமக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது முதற்கட்ட ஆய்வுப் பணிகள் அங்கு முடிந்துள்ள நிலையில், வாழ்விடம் குறித்த பணிகளை கண்டறிய 5 இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : தாண்டவமாடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்…. – கொல்கத்தாவுக்கு 236 ரன்கள் இலக்கு!
இந்நிலையில் அப்பணிகள் குறித்து முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் அங்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு மத்திய தொல்லியல் துறையின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு, ஆதிகால மனிதனின் தலை மற்றும் எலும்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சிவகளை தொல்லியல் தளத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலத்தை கண்டறிய கூடுதல் நிதி தேவைப்பட்டால், அதனை ஒதுக்க தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. அங்கு ஏற்கனவே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க அரசு சார்பில் 23 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
– வேந்தன்







