சேலத்தில் பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது. இதில் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு, கூட்டணி முடிவு மற்றும் வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய ராமதாஸ்,
”இன்று பொதுக்குழு, செயற்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பொதுவாக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில், அந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம்.
பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்தது, எந்தக் கூட்டணி என்பது. எப்போது கூட்டணியை அறிவிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல முடிவெடுப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நாம் நிச்சயம் பெறுவோம்.
ஒரு குழு, கூட்டம், கும்பல், அது நான் வளர்த்த பிள்ளை, பொறுப்பு கொடுத்த பிள்ளை இன்று தூற்றுகிறார்கள். மிகவும் கேவலமாக பேசுகிறார்கள். (தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார் ) மகனை சரியாக வளர்க்கவில்லை. மார்பிலும், முதுகிலும் ஈட்டியை வைத்து குத்துகிறார். அவருக்கு நான் என்ன குறை வைத்தேன். எல்லாம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்.
30 ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்த ஜி.கே.மணியை தரக்குறைவாக பேசுகிறார்கள். என்னையும் நேரடியாக தாக்குகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் என்னுடைய சொந்தங்கள்தான். எந்த சமுதாயமாக இருந்தாலும் எனது உறவுகள்தான். மூத்த டாக்டர்களை பார்க்க சென்றால், அன்புமணி ஏன் இப்படி செய்கிறார். 5 ஆண்டுகள் பொறுக்கக்கூடாதா என்று கேட்கின்றனர். அவரை மாற்ற வழியில்லை என்று நான் கூறினேன்.
இந்த தேர்தல் அவருக்கு சரியான பதிலடி கொடுக்கும். இந்த கூட்டத்தை பார்க்கும்போது 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் நிற்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. இந்த தேர்தல் அவருக்கு பதில் தரும். இந்தத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன்.
நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஆசைப்பட்டால், இந்திய அளவில் பதவி பெற்றிருப்பேன். சத்தியத்தால் அன்புமணிக்கு பதவி கொடுத்தேன். அவரை டாக்டராக்கினேன். 36 வயதில் மத்திய அமைச்சராக்கினேன். ஆனால், இப்போது என்னை அவ்வளவு கேவலமாக பேசுகிறார். இதற்கு எல்லாம் காலம் பதில் சொல்லும்.
நான் கடந்த 10 நாட்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கருத்து கேட்டேன். மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன். அது மிகப்பெரிய வெற்றியை தரும் என்று உறுதியாக நம்புகிறேன். சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூக்கம் வருகிறது” என்றார்.







