திருப்பூரில் கெட்டுப்போன உணவை உண்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அன்பு இல்லத்தில் நேற்று இரவு கெட்டுப்போன உணவை உண்ட மூன்று சிறுவர்கள் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதல் கட்டமாக சிறுவர்கள் உண்ட உணவினை பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் சிறுநீர் மலம் ஆகியவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். அன்பு இல்ல காப்பக நிர்வாகியிடம் உரிய விசாரணை நடத்தப்படும். தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரகாரன், “இந்த இல்லத்தில் ஒரு சிறுவன் மட்டும் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், மொத்தம் 14 மாணவர்கள் தங்கியுள்ளனர். 4-ம் தேதி மதியம் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட சுண்டல், பொறிகடலையைச் சாப்பிட்டுள்ளனர். அதேபோல் 5-ம் தேதி வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட லட்டு, இட்லி, சட்னி, கொண்டைக்கடலை, வெண்பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.
நேற்று இல்லத்தில் செய்த ரச சாதம் மதியம் வழங்கப்பட்டுள்ளது. மதியமே அனைவருக்கும் காய்ச்சல் இருந்ததால் யாரும் சாப்பிடவில்லை. நேற்றிரவு பசியில்லை என கூறியுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டதால் டோலோ 650 பாதி மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. அதிக காய்ச்சல் ஏற்பட்ட ஒரு சிறுவன் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ரசம், சாதம், ஊறுகாய், தண்ணீர் உள்ளிட்டவை சோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 174(3)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையாளரே புலானய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.