அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!

திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் காவலர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி விடுகிறது. யூபிஎஸ் வசதி…

திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் காவலர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி விடுகிறது. யூபிஎஸ் வசதி இல்லாமல் மெழுகுவத்தி வெளிச்சத்தில் காவலர்கள் பணிபுரிகின்றனர்.தாலுகா தலைமை காவல் நிலையமாக உள்ளதால் தினமும் பல்வேறு காரணங்களுக்காக புகார் மனு கொடுக்க பொதுமக்கள் வரும்போது டார்ச் லைட் கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் காவலர்கள் இருக்கும் இடம் இருளில் தெரியவில்லை என பொதுமக்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் புகார் மனு எழுதுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இதனை உடனடியாக சரி செய்து  மின்தடைஏற்படும் நேரங்களில் யுபிஎஸ் இயங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் அருகருகே வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கிளைச்சிறை, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் இயங்குவதால் பொதுமக்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். முக்கியமான கும்பகோணம், மயிலாடுதுறை சாலையாக இருந்தும் இத்தனை அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையிலும் மெயின் ரோட்டில் மின்மினி பூச்சிகள் போல் வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் ஒளிர்கின்றன.

இதனால் அந்த பகுதி எப்போதும் இருளாகவே தென்படுகிறது. பேருந்து ஏறி செல்வதற்கு
காத்திருக்கும் பயணிகள் ஒருவித பயத்துடனே இருளில் காத்திருக்கின்றனர். அந்த
இடத்தில் அதிக ஒளி தரக்கூடிய உயர்மட்ட கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.