சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பலமேட்டில் சிலர் பூஜை செய்த விவகாரத்தில், அவர்களுக்கு உதவியதாக வன ஊழியர்கள் இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புனித தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ‘மகரஜோதி’ அன்று பக்தர்களுக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவமாக காட்சியளிப்பார்.
சபரிமலையின் ஒரு பகுதியான பொன்னம்பலமேட்டில் சட்டவிரோதமாக நுழைந்து பூஜை செய்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாராயணன் என்பவர் தலைமையில் இந்த பூஜை நடைபெற்றது தெரியவந்துள்ளது. உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து சட்ட விரோதமாக பொன்னம்பலமேட்டில் பூஜைகள் செய்தவர்கள் மீது பச்சகானம் வனத்துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த பூஜையை செய்த நாராயணன், ஒரு வாரத்திற்கு முன்பு பொன்னம்பலமேட்டிற்கு வந்து பூஜை செய்தாகவும், இவர் இதற்கு முன்பு சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளராக இருந்த கீழ்சாந்தியிடம் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரை, விசாரணை மேற்கொண்டு அவசர அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி வனத் துறைத் தலைவர் மற்றும் காவல்துறைத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.
தலைமறைவான நாராயணன் உட்பட ஏழு பேரை தேடி வரும் நிலையில் நாராயணன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியதாவது:
”சந்நியாசியானா நான் திருச்சூரில் வசித்து வருகிறேன். தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று பூஜை செய்து வருகிறேன். அதன் அடிப்படையில் பொன்னம்பலமேட்டுக்குப் போகும் சூழ்நிலை கிடைத்தது. இப்படி பூஜை செய்ய போகும் இடங்களெல்லாம். அய்யப்பன் அருள் பெற்றதால் தான் பொன்னம்பலமேட்டில் பூஜை செய்ய முடிந்தது. ஆனால் அங்கு எந்த தவறும் செய்யப்படவில்லை. பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை” என விளக்கம் அளித்தார்.
பூஜை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பொன்னம்பலமேடு வனப்பகுதிக்கு பூஜை செய்தவர்களுக்கு உதவியதாக கேரள வனத்துறையை சேர்ந்த ராஜேந்திர கருப்பையா மற்றும் ஷாபு மேத்யூ ஆகிய இருவரையும் பச்சைகாணம் பகுதி வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இடையே இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சபரிமலையில் ஐதீகம் கெட்டு விட்டதாகவும் இதற்கு தேவப்பிரசன்னம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.







