ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளவாண்ட சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பானையில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வைகாசி மாதம் முதல் செவ்வாய்கிழமை நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருங்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்த தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க வருகை தந்தனர்.
தொடர்ந்து சுவாமி கள்ளவாண்டருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு
நள்ளிரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. சுவாமியாடி வேட்டைக்குச்
சென்ற பின் இரவு 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேட்டைப்பானை
நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் 7
பிரம்மாண்ட பானையில் பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி
காய்ச்சினார்கள்.
கஞ்சி காய்ச்சும் நேரத்தில் நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி கதை பாடப்பட்டது. இந்தக் கதையைக்
கேட்டு அருள் முற்றும் சாமியாடிகள், பானைக்கு அருகில் சென்று தென்னம்பாளையை
பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி
அருளோடு ஆடினார்கள். அங்கு நின்று பார்த்த பக்தர்கள் கண் இமைக்காமல் இந்த
காட்சியை கண்டு பரவசமடைந்தனர்.







