’வேலைக்காரர் அல்ல, வாழ்க்கை துணை’ ; மனைவி சமைக்கவில்லை எனக் கூறி விவாகரத்து கேட்ட கணவருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!

திருமணமான பெண் வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்பதைக் காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கணவர் ஒருவர், தனது மனைவி சமைக்கவில்லை எனக்கூறி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த கணவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அவர்கள், “நீங்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது உங்களோடு வாழ்வதற்கே தவிர, வீட்டு வேலைகளை செய்வதற்கு அல்ல. அந்த காலம் மாறிவிட்டது. மனைவி என்பவர் வீட்டு வேலைக்காரர் அல்ல, அவர் உங்கள் சரிபாதி, வாழ்க்கைத்துணை. சமைப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் கணவர்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். மனைவி சமைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது” என்று தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையின் போது தம்பதியினர் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு விவரம்

கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கணவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அப்போது கணவர் தரப்பில், அவரது மனைவி தன்னையும், தமது குடும்பத்தாரையும் தரக்குறைவாகப் பேசுவதாகவும், சமைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்விற்கும் தனது குடும்பத்தாரை அழைக்கவில்லை என்றும், இது ‘மனரீதியான கொடுமை’ என்றும் அவர் வாதாடினார்.

கணவர் வீட்டார் தனது சம்பளத்தைக் பறித்துக்கொண்டதாகவும், பெற்றோர் வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் கேட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும் இதற்கு மனைவி தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குடும்ப நலநீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து மனைவி தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவாகரத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, கணவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.